தமிழ் இராச்சியத்தின் தோற்றம்பற்றிய முன்னைய வரலாற்றுப் பார்வையை மீள்வாசிப்பிற்கு உட்படுத்தும் தமிழ்க் கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு | அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் | பரமு புஸ்பரட்ணம்
Description
திருகோணமலை நகரில் இருந்து ஏறத்தாழ 50 கி.மீ தொலைவில் திருகோணமலை மாவட்டத்தில் தனிநிர்வாகப் பிரிவாக உள்ள கோமரன்கடவல பிரதேசத்தில் உள்ள முக்கிய வீதியுடன் இணைந்திருக்கும் காட்டுப்பகுதியில் கல்வெட்டொன்று காணப்படுகின்றது. முன்னர் இப்பிரதேசம் கட்டுக்குளப்பற்று நிர்வாகப் பிரிவாக இருந்த போது இந்த இடம் குமரன்கடவை எனவும் அழைக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது. இங்குள்ள காட்டுப்பகுதியில் கல்வெட்டுடன் அதன் சமகாலத்திற்குரிய அழிவடைந்த சிவாலயமும், அதன் சுற்றாடலில் அழிவடைந்த கட்டட அத்திபாரங்களும் காணப்படுகின்றன. அவற்றுள், அழிவடைந்த சிவாலயம் அதேநிலையில் தொல்லியற் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாலயத்திற்கு மிக அருகிலுள்ள சிறு மலையிலேயே கல்வெட்டும் காணப்படுகின்றது.
இம்மலையின் மேற்பகுதியில் திருவாசிபோன்ற வட்டமும், அதனுடன் இணைந்த ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கமும் செதுக்கப்பட்டுள்ளன. சிவலிங்கத்திற்கு மேலிருக்கும் வட்டம் சக்தி வழிபாட்டு மரபுக்குரிய சக்கரமாக இருக்கலாம் எனப் பேராசிரியர் பொ. இரகுபதி குறிப்பிடுகின்றார். இக்குறியீடுகளுக்கு கீழே 22 வரிகளில் தமிழ்க் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. முதல் இரு வரிகளும், ஏனையவற்றில் சில சொற்களும் சமஸ்கிருத கிரந்தத்தில் இருக்கின்றன. கல்வெட்டின் வலப்பக்கத்தில் உள்ள பல எழுத்துப் பொறிப்புக்கள் மலையின் மேற்பகுதியில் இருந்து கீழ்நோக்கி வழிந்தோடும் நீரினால் சிதைவடைந்தும் தெளிவற்றும் காணப்படுகின்றன.
கி.பி.13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த இக்கல்வெட்டுப் பற்றிய தமிழக அறிஞர்களின் வாசிப்பிலிருந்து இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாதிருந்த புதிய பல வரலாற்று உண்மைகள் தெரியவந்துள்ளன. அவை சோழர் ஆட்சியிலிருந்து ஐரோப்பியர் காலம்வரை தமிழர் பிராந்தியங்களின் ஆட்சியுரிமை, நிர்வாக ஒழுங்கு என்பன தனிப் போக்குடன் வளர்ந்தமையைக் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளன. மேலும் யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றகாலப் பின்னணி, அது தோன்றிய காலம், தோற்றுவித்த வம்சங்கள் தொடர்பான முன்னைய வரலாற்றுப் பார்வையை மீளாய்வு செய்வதிலும் தெளிவுபடுத்துவதிலும் இக்கல்வெட்டு அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.
தென்னிந்தியாவில் நீண்டகால வரலாறு கொண்டிருந்த சோழ அரசு தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு பத்தாம் நூற்றாண்டிலிருந்து ஒரு பேரரசாக எழுச்சியடைந்த போது அவ்வரசின் செல்வாக்கால் சமகால இலங்கை வரலாற்றிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் தமிழ் நாட்டு அரச வம்சங்களை வெற்றி கொண்டதன் பின்னர் சோழர், இலங்கைக்கு எதிராகவும் படையெடுத்து வந்தனர். இது முதலாம் பராந்தகசோழன் காலத்தில் ஆரம்பித்துப் பின்னர் இராஜராஜசோழன் காலத்தில் கி.பி. 993இல் இலங்கையின் வடபகுதி வெற்றி கொள்ளப்பட்டது. கி.பி. 1012 இல் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் இலங்கை முழுவதும், வெற்றி கொள்ளப்பட்டு புதிய தலைநகரம் ஜனநாதபுரம் என்ற பெயருடன் பொலநறுவைக்கு மாற்றப்பட்டதாக சோழர்காலச் சான்றுகளால் அறிகின்றோம்.
இக்கல்வெட்டால் அறியப்படும் முக்கிய வரலாற்றுச் செய்திகளோடு அவற்றில் இடம்பெற்றுள்ள சில பெயர்கள், சொற்கள் தொடர்பாக அறிஞர்கள் கூறும் கருத்துக்களும் விளக்கங்களும் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வில் முக்கியத்துவம் வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன. முதலில் ‘“ஸ்வயம்புவுமாந திருக்கோ(ணமலை) யுடைய நாயநாரை” என படிக்கப்பட்டதை பேராசிரியர் இரகுபதி “ஸ்வயம்புவுமாந திருக்கோயிலுடைய நாயநாரை” எனப் படித்திருப்பதை பேராசிரியர் சுப்பபராயலு பொருத்தமானதெனக் எடுத்துக்கொண்டுள்ளார். இச்சிவாலயத்தில் காணப்படும் சிவலிங்கத்தின் அமைப்பு ஸ்வயம்பு என்ற சொல்லுக்குப் பொருத்தமாக இருப்பதினால் இக்கல்வெட்டு இந்தக்கோயிலையே குறிப்பிடுகின்றது என்பது பேராசிரியர் இரகுபதியின் விளக்கமாகும். மேலும் அவர் கல்வெட்டில் வரும் இடப்பெயரை “லச்சிகாமபுரம்” என வாசித்து அது இப்பிரதேசத்திற்கு உட்பட்ட ஒரு இடத்தின் பெயர் எனக் குறிப்பிடுகின்றார்.